;

பாடல்கள்

Wednesday, August 26, 2009

பறிபோவது இந்திய ஆய்வியல் துறையா? நமது இனத்தின் மானமா?மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!

அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.

இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

மலேசியத் தமிழருக்கும் தமிழுக்கும் உரிமையாக இருக்கின்ற இந்திய ஆய்வியல் துறைக்கு வாழ்வா? சாவா? என்கிற விளிம்பில் நின்றுகொண்டு, அதன் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறது இந்தப் பதிவு! இன்றைய இளையோருக்கு நேற்றை நிகழ்வுகளைத் தூசுதட்டித் தருகிறது இந்த இடுகை! தொடந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனியாக ஒரு துறை செயல்படுவது என்பது பெரிய போராட்டத்தின் வழியாகக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சுவடுகள் மறைந்துபோனதால் தானோ என்னவோ, இன்றையத் தமிழர்களிடம் மொழிமானமும் இனமானமும் மழுங்கிப்போய்விட்டது போலும்!

சிங்கப்பூரில் செயல்பட்ட ஏழாம் கிங் எட்வர்டு (King Edward VII-1905) மருத்துவக் கல்லூரியும் இராபில்சு கல்லூரியும் (Raffles College-1929) இணைத்து, அத்தோபர் மாதம் 8ஆம் நாள் 1949ஆம் ஆண்டில் சிங்கையில் உருவாக்கப்பட்டதுதான் மலாயாப் பல்கலைக்கழகம்.

அதில், தமிழ்த்துறையை ஏற்படுத்துவதற்கு அன்றைய மலாயா, சிங்கைத் தமிழர்கள் எழுச்சியுடன் போராடினர். இந்தப் போராட்டத்தை அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி (கோ.சா) அவர்களின் ‘தமிழ் முரசு நாளேடு’ முன்னெடுத்து நடத்தியது. அதற்காக அன்றையத் தமிழர்கள் பெரும் அளவில் ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொடுத்தனர்.

இதன் விளைவாக, 1956ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை நிறுவப்பட்டது. பின்னர், 1959இல் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு இடம் மாறி வந்தது.

தொடக்கத்தில், தமிழ்த் துறை நிறுவப்பட்டபோது அதற்கு தகவுரைகள் (ஆலோசனை) வழங்க, இந்தியாவிலிருந்து நீலகண்ட சாத்திரியார் (Neelakanda Shasthri) மலாயா வந்தார். தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் பயிற்றுமொழியாக ‘சமற்கிருதத்தை’ (Sanskrit) வைக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரைக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. பெரும்பான்மைத் தமிழர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. மீண்டும் ‘தமிழ் முரசு’ நாளிகையின் வழியாக அமரர் கோ.சாரங்கபாணி களமிறங்கினார். அதோடு, காராக்கு(Karak) அகில மலாயாத் தமிழர் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் கல்வி அமைச்சுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனுவைக் கையளித்தன.
  • தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் வாயிலாக அரசாங்கத்தால் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; பயிற்றுமொழியாகத் ‘தமிழ்’ அரியணையில் அமர்த்தப்பட்டது.


இந்த மகிழ்ச்சியான செய்தியைப் “பல்கலைக்கழகத்தில் தமிழுக்கே முதன்மை” என்று சிங்கை தமிழ் முரசு முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்தச் செய்தியால் ஒட்டுமொத்தத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இதோடு போராட்டம் ஓய்ந்ததா என்றால், இல்லை! தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதே தமிழ் முரசு மூலம் அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிதிக்கு ஒவ்வொரு தமிழரும் ஆளுக்கு ஒரு வெள்ளி தரவேண்டும் என வலியுறுத்தினார்.

அமரர் கோ.சா.வின் வேண்டுகையை ஏற்று மொழி உணர்வும் இன உணர்ச்சியும் கொண்ட மலாயாத் தமிழர்கள், நாடு முழுவதும் நிதியைத் திரட்டிக் கொடுத்தனர். இந்த முயச்சிக்கு ஆதரவாக அகில மலாயா தமிழர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கங்கள், தமிழாசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கினர். இப்படியாகத் திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் வெற்றியோடு உருவாக்கப்பட்டது.
*(இன்றும்கூட நம் நாட்டில் இயங்கும் மிகப்பெரிய நூலகம் என்ற சிறப்பைப் பெற்றது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகம்தான்.)

இத்தனைக்கும் இடையில், தமிழ்த்துறையில் படிப்பதற்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியும் நடந்தது. அன்று நாடுதழுவிய நிலையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாக்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த்துறையில் மாணவர்கள் குறையும் போதெல்லாம் தமிழர் சார்ந்த இயக்கங்களின் அன்றையத் தலைவர்கள் ‘பல்கலைக்கழத்தில் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்’ என்று ஊர்கள்தோறும், தோட்டங்கள் தோறும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தினர்.

அன்று தொடங்கி இன்று வரையில் மலாயாப் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்து தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரிகளாக உருவாகி இருக்கின்றனர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் வரையில் தமிழிலேயே படிப்பதற்கான சூழல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று உருவாகி இருக்கிறது. மேலும், மொழியியல் புலம் என்ற மற்றொரு துறையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு, பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்திருப்பதுதான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை. காலந்தோறும் அதற்கு நெருக்கடிகள் ஏற்பட்டு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையும் உணர்வும்தாம் அரணாக இருந்து அத்துறையை மீட்டுத் தந்திருக்கிறது; உயிரோடும் உயிர்ப்போடும் காத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

அரைநூற்றாண்டுக் கால வரலாற்றைப் பெற்றிருக்கும் நமது இந்திய ஆய்வியல் துறை, இன்று பல நெருக்கடிகளுக்கு இடையில் தவித்துக் கொண்டிருக்கிறது! சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறது! இந்திய ஆய்வியல் துறை பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!

அதனைக் காக்கவும் காப்பாற்றவும் திறனற்றவர்களா நாம்?
அதனைக் காக்கவும் காப்பாற்றவும் வழியற்றவர்களா நாம்?
அதனைக் காக்காவிட்டால் வரலாற்றுப் பழி ஆகாதா? பிழை ஆகாதா?
அதனைக் காப்பாற்றாவிட்டால் அடுத்தத் தலைமுறை நம்மைக் கேள்வி கேட்காதா? நமது முகத்தில் காறி உமிழாதா?

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. இந்திய ஆய்வியல் துறை.. மிகக் குறைந்த ஆயுளோடு.. வரலாற்றுத் தடத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே.. நமது கண்முன்னாலேயே..

காணாமல் போகலாமா?

அப்படியே போனால்..!

பறிபோகப் போவது இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல!

ஒட்டுமொத்த மலேசியத் தமிழரின் மானமும்தான்!!

செய்தி:திருத்தமிழ்

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் "கலை இலக்கிய தினம்"

இடம்:
தான் ஸ்ரீ சோமா அரங்கம், துன் சம்பந்தன் கட்டிடம்

நாள்:

29 ஆகசுட் 2009 (சனிக்கிழமை)
நேரம்:
காலை 9.00 - இரவு 7.00

கட்டணம்:
ரிங்கிட் 50 மட்டும்

(ம. நவீன் கவிதைத் தொகுதி,
மஹாத்மன் சிறுகதைத் தொகுதி
&
பா.அ. சிவம் மொழிபெயர்ப்புக் கவிதைகள்
தொகுதிகளின் விலை இதில் அடக்கம்)


தொடர்புக்கு:016 - 3194522 (ம. நவீன்)

தாயின் மேல் ஆணை! தந்தை மேல் ஆணை!

தாயின் மேல் ஆணை! தந்தை மேல் ஆணை!
தமிழக மேல் ஆணை!
தூய என் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கிறேன்.

நாயினும் கீழாய்ச் செந்தமிழ்
நலிவதை நான் கண்டும்,
ஓய்தல் இன்றி அவர்நலம் எண்ணி,
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய் தடுத் தாலும் விடேன்!
எமை நத்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்.

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனை அழைத்திடில் தாவி,
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த எம் மறவேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலி நிகர் தமிழ் மாந்தர்.

ஆன என்தமிழ் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்...
தமிழ் நெறி இதழ்

Tuesday, August 25, 2009

புலிகளுக்குச் சொந்தமான 10 சிறிய ரக வான

தமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும்
கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் நயகம் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"எரித்திரியாவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன. இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக வானூர்திகள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த வானூர்திகளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் எரித்திரிய பாதுகாப்புத் தரப்பினருடனும், அந்நாட்டின் வானூர்தி நிலைய அதிகாரிகளுடனும் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

உங்களைப் .................

உங்களைப் புதைத்த மண் உறங்காது

உரிமை பெரும் வரை கலங்காது

எங்களின் தாயகம் விடிவு பெறும் - புலி

ஏற்றிய கொடியுடன் ஆட்சி வரும்.

Wednesday, August 05, 2009

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம்

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம். நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டுவீச்சிலும் பீரங்கித் தாக்குதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் மக்கள் ''தஞ்சமடைவதற்காக'' என்று சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது சிங்கள இனவெறிப் படை பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. தொகை தொகையாக குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் உதவிப் பொருட்களை வாங்குவதற்காக பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது சிங்களப்படை நடத்திய உக்கிரத் தாக்குதலில் 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஐ.நா. உட்பட பல நாடுகள் இந்த அரச பயங்கரவாதச் செயலைக் கண்டித்தன.

வன்னியில் பலநூறு பேர் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளும் மருத்துவர்களும் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா.அமைப்பே தெரிவித்துள்ளது. இந்த நிலையிலும் கூட தொடர்ந்து வரும் பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்களால், சிங்கள இராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதிகள், உயிரைக் காப்பதற்காக ஓடி வரும் தமிழ் மக்களை ஒரே இடத்தில் குவியச் செய்து குண்டு போட்டு கொன்றழிப்பதற்கான பொறி தானோ என்ற ஐயம் பலமாக எழுந்துள்ளது.

1995களில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிங்கள இராணுவம், அப்பொழுது யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த தற்போதைய சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையலில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தும் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் நடத்திய வெறியாட்டமும் செம்மணியில் குவியல் குவியலாக தமிழர் உடல்கள் புதைக்கப்பட்டதையும் மனித நேயம் கொண்ட யாராலும் மறந்திருக்க முடியாது. தற்பொழுது உயிர் பிழைக்க வவுனியா வந்து தஞ்சம் புகுந்திருக்கும் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் அதே போன்தொரு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுரம், பொலநறுவ உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள காட்டுப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் உடல்கள் எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிப்பட்ட சிங்கள அரசின் தொடர்ச்சியான தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் உலகில் இனப்படுகொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை ஏற்கெனவே சேர்த்து பட்டியலிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு. அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ''மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்'' என சிங்கள அரசை வெளிப்படையாக தற்பொழுது கண்டித்துள்ளார். சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, கோத்பாய ராஜபக்சே மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது ஐ.நா.மன்றத்தில் இனப்படுகொலைக் குற்றம் இழைத்தற்கான வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. மேலும், ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளை சார்ந்தவர்களும், ஊடகவியல் அமைப்புகளும் சிங்கள அரசின் பாசிசப் போக்கைக் கண்டித்து வருவதால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையிலும் கூட, சிங்கள அரசுடன் ''நல்லுறவு'' பேணுகிறதாம் ''இந்தி''யா. சொந்த மக்களை குண்டு போட்டு அழித்து, கொலைகாரன் என்று உலகமே அடையாளம் காட்டும் ஒருவனுடன் ''நல்லுறவு'' பேணத் துடிப்பவனுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்?

ஈழத்தில் போரை நிறுத்த வேண்டுமென தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக சட்டமன்றம் இருமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று இந்தியப் பிரதமரிடம் வலிறுத்தி வந்தனர். இத்தனைக்குப் பிறகும், போர் நிறுத்தம் பற்றி கவலையே கொள்ளாததற்குக் காரணம், ''இது இலங்கை நடத்தும் போர் அல்ல. இந்திய அரசு தானே தலைமை தாங்கி சிங்களவனை வைத்து நடத்தும் போர்'' என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கண்டு கலக்கமுற்ற தி.மு.க. அரசு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இலங்கைக்கு செல்லுமாறு வேண்டிக் கேட்டது.

அவருக்குப் பதிலாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். தமிழர்களின் கோரிக்கையான போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தத்தான் அவர் இலங்கை சென்றார் என்று நம்பிய ''இந்தி''ய தமிழர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசினார், சிவசங்கர மேனன். போர் நிறுத்தம் பற்றி வாயே திறக்காமல் ''நல்லுறவு'' பேணுவதற்காகத் தான் சென்றேன் என்று கொழும்பில் கொழுப்புடன் தெரிவித்திருந்தார்.

இறந்து போன ஒரு பெண் போராளியின் உடலைக் கூட இனவெறி பிடித்த சிங்கள இராணுவ மிருகங்கள் சின்னாபின்னாமாக்கிய செய்தி மனிதநேயம் கொண்ட அனைவரது நெஞ்சத்தையும் கலங்கச் செய்தது என்றாலும் ஒருவேளை ''இந்தி''ய அரசுக்கு இச்செயல் நிறைந்த மகிழ்ச்சியளித்திருக்ககூடும். அதனால் தான், இறந்து போன ஒரு தமிழ்ப் பெண்ணின் உடலுக்கே இது தான் கதி என்ற நிலைமையை ஏற்படுத்தி ''சனநாயகத்தை'' நிலைநாட்டியிருக்கிற சிங்கள இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை ''உலகின் தலைச்சிறந்த இராணுவத் தளபதி'' என்று நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் சிவசங்கர மேனன். அப்பொழுது தான் அவரது கொழும்பு வருகையின் உள் அர்த்தம் புரிந்தது. தில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்திக்கக் கூட பயந்து ஓடிய இந்த பார்ப்பான் தான் ''இந்தி''ய நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளராம்.

தமிழினம் மீது தீராத பகை கொண்ட ஆரிய பார்ப்பனிய இனவெறி ''இந்தி''ய அரசு, சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து செய்து வரும் ஆயுத, ஆள், நிதி உதவிகள் அவ்வப்போது அம்பலப்படும் பொழுதெல்லாம் தமிழக காங்கிரசார் தொடர்ந்து மறுத்து வந்தனர். பின்னர் கலைஞரை முன்னிலையில் வைத்துக் கொண்டே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ''தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு வழங்கப்பட்ட தற்காப்பு உதவிகள் தாம் அவை'' என்று செய்தியாளர்கள் முன் அறிவித்தார். தில்லிக்கு தமிழகத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிச் செயல்களில் ''முதல்வரான'' முதல்வர் கருணாநிதி இதனை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தார். தமிழனைக் கொல்வது தான் ஆரிய ''இந்தி''யத்திற்கு பாதுகாப்பா? என்று கேட்டால், ''நாம் ஆயுதம் தராவிட்டால் சீனா தந்துவிடுமாம்'' கூச்சமின்றி சொல்கின்றன துரோக காங்கிரசின் வெக்கங்கெட்ட ''தலைகள்''.

இந்தியா இப்பொழுது ஆயுத உதவி செய்துவிட்டதால் சீனாவோ பாகிஸ்தானோ தான் செய்த உதவிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளன. இறுதிப் போர் என்று சீனாவிடம் அண்மையில் கூட 120 பீரங்கிகளை பெற்றுள்ளது சிங்கள அரசு. இவை போதாதென்று ஈரோட்டில் மக்கள் பார்க்கும் விதமாக தைரியமாகவே கொச்சின் துறைமுகத்திற்கு பீரங்கிகள் அனுப்பி அங்கிருந்து இலங்கைக்கு வழங்கியிருக்கிறது ''இந்தி''யா. மேலும் தஞ்சை விமானப்படைத் தளத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்ததையடுத்து அத்தளத்தை இழுத்து மூடக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன.

எனவே, காங்கிரஸ்காரர்களுக்குத் தேவை, தமிழனைக் கொல்ல ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்த ஒரு காரணம் தானே தவிர இந்தியாவின் பாதுகாப்பு மண்ணாங்கட்டியெல்லாம் அல்ல என்பதை உணர முடிகின்றது. இந்தியா பீரங்கிகள் வழங்கிய தினத்துக்கு மறுநாள் தான் 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பீரங்கித் தாக்குதலால் மரணமடைந்தனர் என்ற செய்தி நம்மையடைந்தது. அதனால் தானோ என்னவோ, ''நம்ம பீரங்கி நல்லாத்தான் வேலை செய்கிறது போல..'' என்றெண்ணி பிரணாப் முகர்ஜி உடனே ஓடோ டி சென்று ராஜபட்சே பிரதர்ஸ்ஸூடன் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் ''நல்லுறவு'' பேணவும் கொழும்பு சென்றார். ''போரை நிறுத்துங்கள்'' என்று தமிழகமே உரக்கக் கத்தினாலும் அடிமைகள் குரல் எடுபடாது என்று செவிமடுக்காமல் சிங்கள அரசைத் தட்டிக் கொடுக்கும் காரியங்களில் தொடர்ந்து ''இந்தி''யா ஈடுபட்டிருக்கின்றபோது இனியும் இங்கு எவனாவது ''இந்தி''யன் என்று சொல்லிக் கொண்டு திரிவானா?

மேலும், தற்பொழுது போரில் ஈடுபட்டுள்ள சிங்கள இராணுவத்தினரின் படங்களை சிங்ள இராணுவத்தின் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில படங்கள் ''இந்தி''யப் படைகள் இப்போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்று பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையில் சார்க் மாநாட்டின்போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் பெருந்தொகையான இராணுவம் கொழும்பு சென்றது. மாநாடு முடிந்து இந்தியப் பிரதமர் திரும்பிய பின்னரும் கூட பாதுகாப்பிற்கு சென்றவர்கள் திரும்பவில்லை. ஏன்? இவர்கள் எங்கே சென்றார்கள்? ஒருவேளை கொழும்பில் தொலைந்து விட்டார்களோ..!?

மகாராட்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்நாடு மீது இந்திய அரசு போர் தொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகளவில் இதனை பெரும் பிரச்சினையாக்குகின்றது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாடக் கூட செல்லக் கூடாது என அறிவுறுத்துகிறது. சரி அது இருக்கட்டும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சுட்டுக் கொன்றழிக்கும் சிங்கள கடற்படைக்கு ''இந்தி''ய அரசு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? சுட்டுக்கொல்லப்பட்டு செத்து மடியும் தமிழக மீனவன் ''இந்தியன்'' இல்லையா? ''இந்தி''ய அரசுக்கு ஏனிந்த இரட்டை வேடம்?

தற்பொழுது ஈழத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழக மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது சிங்களக் கடற்படை. இதனைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் அணியை இலங்கையுடன் விளையாட அனுப்பி வைக்கிறது ''இந்தி''ய அரசு. நமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள நாட்டுடன் விளையாடச் செல்கிறோமே என்ற குற்றவுணர்வு இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கும் ஏற்படவில்லை; ஏற்படாது. ஏனெனில் தமிழர்களை ''இந்தி''யர்களாக அவர்கள் பார்ப்பதே கிடையாது. நாம் தான் வெக்கமின்றி ''ஜனகணமண'' பாடிக் கொண்டு ''இந்தி''ய அடிமைகளாகவே வாழ்ந்து தொலைக்கிறோம்.

மும்பை தாக்குதலை நடத்த கடல்வழி ஆயுதங்களுடன் வந்தவர்களை தடுக்கத் துப்பில்லாத இந்திய கடற்படை, விடுதலைப்புலிகளுக்கு காய்கறி செல்கிறதா, கம்பிகள் செல்கிறதா என தமிழக மீனவர்களை பிராண்டி எடுத்து, தனது வலிமையைக் காட்டி வருகின்றது. இதுவரை ஒரு தமிழக மீனவனைக் கூட சிங்களவனின் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து காக்க வக்கில்லாத ''இந்தி''யக் கடற்படை ''வீரர்''கள், தமிழக மீனவப் பகுதிகளில் புலிகள் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் தமிழர்களின் பிணங்கள் விழுந்து கொண்டுள்ளன என்று நன்றாக அறிந்து வைத்து கவிதை படிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, பொறுமையாக மூன்று வாரங்கள் கழித்து பிப்ரவரி 15-ஆம் தேதி கூடி அடுத்ததென்ன என ஆராய்வோம் என்று அறிக்கை விடுகிறார். காலம் தாழ்த்தித் தரப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது என்பதனை அறியாதவரல்ல கலைஞர். ஈழத்தமிழர்களின் உயிரை விட பதவிக்காக காத்திருக்கும் தனது குடும்பத்தினரின் எதிர்காலம் முக்கியமானதல்லவா அவருக்கு? அந்த பிப்ரவரி 15, இந்த ஆண்டு பிப்ரவரி அல்ல என்று அறிவிக்கக்கூடிய வார்த்தை ஜாலம் கலைஞரிடம் நிறையவே உண்டு என்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் ''தேசத் துரோகிகள்'' என்று அறிவிக்கிறார், அ.திமு.க. தலைவி செயலலிதா. அவரது சொற்படியே பார்த்தால், விடுதலைப் புலிகளை உறுதியுடன் ஆதரிக்கும் ம.தி.மு.க. என்ற ''தேசத் துரோகிக்'' கட்சியுடன் கூட்டு சேர்நது செயல்படும் அ.தி.மு.க. ஒரு தேசத் துரோக் கட்சியே! இஸ்ரேலின் குண்டு வீச்சில் பலியான அப்பாவி மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடத் தெரியும் அ.தி.மு.க.வின் ஆரிய இன அருந்தவப் புதல்வியிடம், ஈழத்தமிழர்களின் உயிர் போவது குறித்துக் கேட்டால் ''அப்பாவிகள் மரணமடைவது தவிர்க்கமுடியாதது'' என சிங்களவர்கள் கூட சொல்லாத சொற்களை வாய்கூசாமல் சொல்லத் தெரிகிறது.

இவற்றுக்கெல்லாம் நடுவே, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசோ போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கிறார். அவரது முகத்திரையை அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரசே கிழிக்கிறது. ''நீங்கள் தான் தில்லி அரசில் இருக்கிறீர்களே அங்கே போய் சொல்றது இதெல்லாம்'' என்கின்றனர் காங்கிரசார். பாவம், ''இந்தி''யப் பிரதமரே கதி என்று தில்லி மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கும் சுகாதரத்துறை அமைச்சரான அவரது அருமைப் புதல்வர் அன்புமணி ராமதாஸ் என்ன செய்வார் இதற்கு..!

இந்தக் கட்சிகள் மட்டுமல்ல தமிழனத்திற்கு விடிவு வேண்டுகிற எந்தக் ஓட்டுக் கட்சியானாலும் சரி, ''இந்தி''யத் தேசியத்தை ஆதரிப்பதன் மூலம் ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழனுக்கும் சேர்த்து கல்லறை கட்ட தில்லிக்கு கல் எடுத்துக் கொடுக்கிறோம் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக ஓட்டுக் கட்சிகளின் இந்தக் கூத்தாட்டங்களுக்கு நடுவே, மக்கள் நடமாட்டமே இல்லாத சில நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு ''வெற்றி! வெற்றி!'' என சிங்கள அரசு போடும் வெறிக்கூச்சலை வாந்தி எடுக்கும் செயலை இந்திய உளவுத்துறை ஆசியுடன் ஊடகங்கள் செய்து கொண்டுள்ளன. ''தினமலர்'' போன்ற பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல தனது சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டிருப்பதை, புதுச்சேரியில் தனது நிருபரை வைத்தே ராசீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு விட்டு விடுதலை சிறுத்தைகள் தாம் செய்தனர் என்று பக்கம் பக்கமாக எழுதியதும், பின்னர், கையும் களவுமாக பிடிபட்டதும் உணர்த்துகின்றன.

தமிழர்களின் இந்த இழிநிலையையும் தமிழின விடுதலையையும் உரிமையையும் வலியுறுத்திப் பேசிய பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் போன்ற தலைவர்களை அடையாளம் காட்டும் இனத்துரோகச் செயலை தமிழகக் காங்கிரஸ் செய்கிறது. அந்த துரோகத்திற்கு துணைபோகும் வகையில் அதன் கைக்கூலிகள் அவர்களை சிறையிலடைக்கின்றனர்.

ஓட்டு அரசியல்கட்சிகளின் இச்செயல்களை எல்லாம் தாண்டி போர் நிறுத்தம் வலியுறுத்தி தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்துள்ளது நம்பிக்கை தருகின்றது. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டத்தை நசுக்குகின்ற கொடிய நோக்குடன் தமிழக அரசு அம்மாணவர்களை கைது செய்கிறது. உடல்நிலை மோசமாகி 4 மாணவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தித் திணிப்பில் ஈடுபட்ட தில்லியைக் கண்டித்து 1965-களில் மாணவர்கள் முன்னெடுத்துச் சென்ற தமிழ்த் தேசிய எழுச்சியைப் போல இப்பொழுதும் ஏற்பட்டு விடுமோ என தமிழக அரசு அஞ்சுகிறது. பல கல்லூரிகளுக்கு அதன் முதல்வர்கள் விடுமுறை அளித்திருப்பதன் மூலம் மாணவர்கள் போராட்டத்திற்காக ஒன்று கூட விடாமல் தடுத்து விடலாம் என்றும் அரசு எண்ணுகிறது.

தமிழினத்தின் விடியலுக்காக தானே எழுச்சி கொள்ளும் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அலறியடித்து ஓடும் தமிழின எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்ட அணி திரள்வோம். தமிழ்த் தேசிய எழுச்சியின் மூலம் பாசிச சக்திகளை அடையாளம் காண்பதோடு அல்லாமல் அவர்களுக்குப் பாடை கட்டுவோம்! வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஈழத்தமிழனின் ரத்தத்தின் மேல் கம்பளம் விரித்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டுக் கேட்டு வரும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வரலாறு காணாத பாடம் புகட்டுவோம்!

Tuesday, August 04, 2009

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.

இந்திய இராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள இராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள இராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தாவில் என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து ஆனையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள இராணுவம் அஞ்சுகிறது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் இரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது.

இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.

சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த இராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய இராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதைய போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.

இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.

''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது.

இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய இராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.

இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள இராணுவம்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.

தமிழ் ஆர்வலர்களோ, ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய இராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சதீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப்பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?