;

பாடல்கள்

Saturday, October 03, 2009

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 1

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே, உலகு.


பொழிப்புரை (Meaning) :
அகரம் முதலாகத் தொடர்ந்த எழுத்துக்களெல்லாம், மூலமுதல்வனின் முதற்கண் பொருட்டே, உலகில் உள்ளது.


விரிவுரை (Explanation) :

முதற் குறளாகிய இந்தக் குறள் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ் வள்ளுவர் எழுதியிருந்தும் அனைத்து உரையாசிரியர்களும், "கடவுளைப் போற்றவே எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பதை ஏனோ, எழுத்துகளெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனும் விளக்கத்தையே தருகின்றனர். பெரும்பாலும் அனைவரும் பரிமேலழகர் உரையினை அடியொற்றியதாகவே கருதுகின்றேன். [1]

ஆனால் வள்ளுவரின் இக்குறளில் அவ்வகையானத் தொடர்பற்ற தன்மையில் இருவரிகளும் இருப்பதையோ அல்லது இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதையோ என்னால் பார்க்க இயலவில்லை.

இருப்பினும் தெய்வம் உலகத்திற்கு முதற்றேபோலும் அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம் தலை என்றும் கொள்வதிலும் தவறும் இல்லை தான். ஆயின் கடவுள் வாழ்த்து என்றுச் சொல்லிய பிறகு, தெய்வத்தைத் தொழாதே எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையைச் சொல்லவேண்டிய அவசியம் யாது?

எனவே அகர முதல உள்ள எழுத்துக்கள் எல்லாம், ஆதி பகவன் எனும்படியான மூல முதல்வனாகிய கடவுளை முதன்மைப் படுத்தி அவரை அறியும் அல்லது வணங்கும் அல்லது வாழ்த்தும் பொருட்டே உலகில் உள்ளன அல்லது உலகில் உண்டாக்கப்பட்டன எனப் பொருள் கொள்ளலாம்.

அகர முதலிய எழுத்துக்கள் அனைத்தும் இறைவன் பால் படைக்கப்பட்டன என்பதே சரியான பொருள்.

மேலும் இது அகரத்தைத் துவங்கும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதும் உட்பொருள்.

சைவ நெறியே முதல் நெறியாக இருத்தலின் அக்கருத்துக்களை திருக்குறளில் ஒப்பீடு செய்து காட்ட முயற்சித்துள்ளேன். எனவே அவ்விதம் நோக்குங்கால்,

அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவனாகிய அரனை முதற்கண் கொண்டே உலகாயத்தம் ஆகியது என்று உறுதியுடன் சொல்லலாம்.

உலக மொழிகள் அனைத்தும் பெரும்பாலும் அகரத்திலேயே துவங்குகின்றன. அவை மனிதனின் முதல் ஒலியாகவும், அன்னையைக் குறிப்பதாகவும் கொள்கிறார்கள். தமிழில் அது அன்னையையும், அப்பனையும், அரனையும், அம்மையையும், ஓம் காரத்தின் (அஉம் ) முதல் ஒலியாகவும் முதல் எழுத்தாகவும் விளங்குகின்றது. மொழிகளின் முதல் எழுத்து அகரமாயினும், ஒவ்வொரு மொழியின் இறுதி எழுத்தும் வேறுபடுகின்றன. எனவேதான் வள்ளுவர் அகரம் முதல் தொடங்கி னகரவரையிலுமான எழுத்துக்கள் அனைத்தையும் என்று சொல்லாது அகரமுதல எழுத்தெல்லாம் என்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்படி முதல் குறளை அமைத்துள்ளார். வள்ளுவரின் இத்தகைய நுட்பம் மிகவும் போற்றுதற்குரியது. மேலும் வள்ளுவர் முதல் குறளை தமது தாய்மொழியின் முதல் எழுத்தான அகரத்தில் துவங்கி, கடைசிக் குறளின் கடைசி எழுத்தைத் தமிழின் கடைசி எழுத்தான 'ன்' னில் முடியுமாறு அமைத்துள்ளமையால் இத்தகையவாறு மொழி எண் கணிதத்தை இலக்கியத்தில் அமைத்த வகையிலும் முன்னோடியாக விளங்குகின்றார்.

மனிதன் இயற்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தே எதையெல்லாம் வெல்ல இயாலாததோ, விளங்காததோ அவற்றை எல்லாம் இறை என்று கொண்டான். அவ்வாறே அத்தகைய இறையை அறிதலே மனிதனின் முதல் அறிவுத் தேடலாகவும் இருந்தது. எனவே மொழியின் கண்டுபிடிப்பும், கல்வியின் நோக்கமும், அறிவின் தேடலும் அனைத்தும் இறைவனை நோக்கியே இருந்தன. தனது கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்து பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்லவே எழுத்துக்கள் தோன்றின. எனவே அத்தகைய தனது கண்டுபிடிப்புக்களையும், மூலப்பொருளாகிய இறைவனுக்கே அர்ப்பணித்துத் தங்கள் பணியைத் தொடருதல் முறைதானே.


குறிப்புரை (Message) :
அகரம் முதல் தொடங்கும் எழுத்துக்கள் எல்லாம் மூல முதல்வோனாகிய இறைவனை முன்னிறுத்தியே உலகில் உள்ளன.


அருஞ்சொற் பொருள் விளக்கம் (Synonyms) :

ஆதி:மூலம், முதல், தொடக்கம், அடிப்படை, மூத்த
பகவன்: பகுத்தவன், படைத்தவன், இறைவன், கடவுள், முதல்வன், தலைவன்
ஆதி பகவன்

மூல-முதல்வன் என்றால் வேறு கிளை முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று கொள்ளுதல் தவறு. அதாவது இறைவனை அனைத்திற்கும் மூத்தவராக, முதல்வராகச் சிறப்புச் செய்கிறார் என்று கொள்க.


அவையடக்கம் (Note) :

இவ்விதமாக இந்த முதல் குறளிற்கான கருத்தை நான் மட்டுமே முன்வைப்பதாக நினைக்கிறேன். இது எனக்கு முன்னோடிகளைத் தவறென்று சொல்லி எனது மேதமையைக் காட்ட நிச்ச்யம் பதிக்க வில்லை. என் கருத்திலும் தவறில்லை என்று எண்ணுவதாலும் இதுவே பொருத்தமானதாக இருக்கக் கூடுமோ என்று எண்ணுவதாலுமே பதிக்கின்றேன் என்பதைத் தன்னடக்கத்துடனும் அவையடக்கத்துடனும் தெரிவிக்கின்றேன்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 15
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

[1] நான் தற்சமயம் பரிமேலழகர், மணக்குடவர், மு. வரதராசனார், தேவனேயப் பாவாணர், G.U. போப், சித்தானந்த பாரதி, மு. கருணாநிதி, தமிழண்ணல், பி.எஸ். சுந்தரம் போன்றவர்களின் விளக்கங்களை ஒப்பீடு வழிகாட்டிகளாகக் கொண்டு விளக்க முயலுகின்றேன்.

No comments: