;

பாடல்கள்

Saturday, February 13, 2010

ஒரே மலேசியாவை ஒரு நொடியில் காலில் போட்டு மிதித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்.



ஒரே மலேசியாவை ஒரு நொடியில் காலில் போட்டு மிதித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்.


இன்று காலை மலாக்காவில் நடைபெற்ற ஒரே மலேசியா தொடர்பான கருத்தரங்கில் ஒரே மலேசியா கொள்கையை அறிவித்த தலைமை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் டத்தோ நாசிர் பின் சாபார் இந்நாட்டு இந்தியர்களையும் சீனர்களையும் மிகக் கடுமையாக இழிவு படுத்தி பேசிய பேச்சு பெரிய சருச்சையை உருவாக்கியுள்ளது.


மிக உயரிய பொறுப்பு வகிக்கும் பொறுப்புள்ள ஓர் அதிகாரி தம்முடைய பதவி நிலையினை அறியாமல் பொறுப்பற்ற முறையில் நாகரிகமற்ற முறையில் கருத்து சொல்லி இருப்பது மலேசியத் திருநாட்டிற்கும் அதன் தலைமை அமைச்சருக்கும் ஏற்படுத்தப் பட்ட இழுக்காகும். இது பற்றி மலேசியா இன்று வலைப்பக்கத்தில் வந்த செய்தி :


“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க (”jual tubuh”) வந்தனர்”, என்றவர் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத வட்டாரம் கூறியது.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”, என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியான நசிர் சாபார் (டை கட்டியிருப்பவர்) கூறினார்.


“மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை வரைந்ததற்கான முழு பொறுப்பும் அம்னோவை மட்டுமே சாரும்” என்று கூறிய நசிர் அன்றைய கூட்டணி பங்காளிகளின் பங்களிப்பை நிராகரித்து விட்டார்.


“குடியுரிமை பறிக்கப்படும்”

எஸ்பிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 கிற்கு உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு வீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டது.


“அவர் (நசிர்) பல மஇகா கிளைகளுக்குச் சென்று இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை விளக்கியதாகவும் ஆனால் அக்கிளைகள் அரசாங்கம் விதித்துள்ள வரம்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தன என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அவர்கள் “மிதமிஞ்சிய” கோரிக்கையை விடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.


“பகசா மிலாயு அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும். அவர்கள் தொடர்ந்து அவ்வாறான கோரிக்கைகளை விடுத்தால், நான் அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும்”, என்று நசிர் கூறினார்.”


இவவாறு இவர் பேசியதன் வாயிலாக இவர் எண்ணிப் பேசும் திறன் , ஆழமாகச் சிந்திக்கும் அறிவாண்மை, கண்ணியம் முதலான நற்பண்புகள் எவையும் இல்லாதவராகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்.

1. இந்தியர்கள் பிச்சைக்காரர்கள்


2. சீனர்கள் சீனப் பெண்களின் உடலை விற்க வந்தவர்கள்


3. இவர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்.


என்று இவர் பேசியதாக வந்த செய்தி இவர் உண்மையான ஒரே மலேசியா கொள்கைக்கு முரணானவர் என்பதை வெளிப்படுத்துகின்றது. எசு.பி.எம் தேர்வில் 12 பாடங்கள் வேண்டும் என நாம் கேட்பதற்கான காரணம் தமிழ் மாணவர்கள் தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வில் எழுத வேண்டும்; சான்றிதழில் இவை சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும்; உயர்க்கல்வி நுழைவுக்கும் இவை ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் என்பதற்காகவே. இது நம்முடைய உரிமை. நாம் இந்த நாட்டுக் குடி மக்கள்.

எங்கள் தாய் மொழியை நாங்கள் படிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியதற்காக எங்கள் குடியுரிமை பறிக்கப் பட வேண்டுமென்றால், நாட்டின் அடிப்படை சட்டத்தையே மறந்து கொழுத்துப் போய் வாய்க்கு வந்த வண்ணம் பேசிய நாகாக்கத் தெரியாத நாத்தழும்பேறிய இத்தகையாருக்கு என்ன தண்டனை வழங்குவது?

இதையே மற்றவர்கள் சற்று திசைமாறி பேசியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? எங்களுடைய வாழ்வையும் வளத்தையும் வரலாற்றையும் அறியாத குருட்டு முண்டங்களுக்கு நாங்கள் பிச்சைக் காரர்களாகத்தான் தெரிவோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இங்குப் படையெடுத்து வந்து கடாரத்தரசை நிறுவினானே இராசேந்திர சோழன் அவன் என்ன பிச்சைக் காரனா?

அவன் முடிவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் இன்று இந்த வாய் இப்படி பேசுமா? உம்முடைய மொழியிலும் பண்பாட்டிலும் எங்களின் ஆளுமையினை வைத்துக் கொண்டு எங்களைப் பிச்சைக் காரர்கள் என்கிறாயே வேடிக்கையாக இல்லையா?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகு நோக்கிய ஒருமையைப் பேசிய இனம் எங்கள் இனம். ஒரே மலேசியா என்று உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று வைத்துப் பேசிய இனம் அல்ல நாங்கள்.

எங்களுக்கு ஒரு நல்லது கிடைத்தால் ஊருக்கே கொடுத்துப் பகிர்ந்துண்ணும் பகுத்தூண் அறம் பேணிய இனம் எங்கள் இனம். வந்து பார் அப்பனே , பரந்து கிடக்கும் எங்கள் இலக்கியங்களில் நிறைந்து கிடக்கும் மெய்யியல்களைப் பார்! யார் பிச்சைக் காரன் என்பது புரியும். என்ன செய்வது இன்று உனக்கு வாழ்வு வந்தது நள்ளிரவில் குடை பிடிக்கிறாய். அதனால் மிகவும் துள்ளாதே ! காலம் தடம் மாறினால் எல்லாமே தலைக் கீழாகி விடும்.

மலேசியா மிகச் சிறந்த நாடு. பல்லின மக்கள் வாழும் நாடு. அமைதியான நாடு. ஆனால் இந்த நாட்டை இது போன்ற இன வெறியர்கள் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள். ஒரே மலேசியா கொள்கையைப் பற்றி பேசப்படும் இடத்திலேயே அதைக் காலில் போட்டு மிதிக்கும் வண்ணம் பண்பு கெட்ட வகையில் ஓர் அதிகாரி பேசியிருக்கிறார் என்றால் இந்நாட்டில் நற்செயல்கள் வெற்றியடையுமா? இப்படியானவர்கள் நாட்டுக்கு நன்மை சேர்க்கும் குடிமக்களா? போகூழைக் கொண்டு வரும் கேடர்களா? இறைவா எங்கள் நாட்டை இந்தக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக.....

உங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்

மலேசியாவில் இன்று வார மாத இதழ்கள் காளான்காய் வளர்ந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை திரைபடக் கவர்ச்சியைப் பரிமாறும் ‘கவுச்சி’ ஏடுகளாகவே உள்ளன.
இன்று வெளிவரும் எந்த இதழுக்கும் மொழி, இலக்கணம், இலக்கியம், மரபு, பண்பாடு பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை கிடையாது. இன்றைய இதழ்களின் முக்கிய இலக்கே காசு பண்ணுவதுதான் - பணம் சம்பாதிப்பது தான். அதற்காக, மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கழிசடைகளையும் வெளியிடுகிறார்கள்.

இவற்றுக்கு நடுவில், தமிழ்நலச் சிந்தனையோடு – தமிழ்க்காப்பு உணர்வோடு – இலக்கிய நயத்தோடு – இலக்கணச் செப்பத்தோடு – தமிழ்க்கல்வி நலத்தோடு ஓர் இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது.

பெரிய அளவில் எந்த அறிமுகமும் இல்லாமல் ஆனால், தரமிக்க வாசகர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், நல்லாசிரியர்கள், நன்மாணாக்கர் ஆகியோரின் ஆதரவோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்விதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அதுதான் உங்கள் குரல் மாத இதழ்.
மலேசியாவின் மூத்த செய்தியாளரும்; மூத்த மரபுக் கவிஞரும்; இலக்கியப் பொழிவாளரும்; இலக்கண அறிஞரும்; தொல்காப்பிய ஆய்வாளருமாகிய நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் இவ்விதழின் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

மலேசியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மொழி – தமிழ் இலக்கியம், இலக்கணம் – மரபுக் கவிதை ஆகியவற்றை காத்து நிற்கவும் கட்டி எழுப்பவும் ‘உங்கள் குரல்’ அயராது பாடாற்றி வருகின்றது.

யுபிஎசார், பிஎமார், எசுபிஎம், எசுதிபிஎம் ஆகிய முகாமையான தேர்வுகளுக்கான தமிழ்மொழிப் பாட வழிகாட்டிகள், வினாவிடை அணுகுமுறைகள், மாதிரி வினாக்கள், பயிற்சிகள் முதலானவையும் இவ்விதழில் இடம்பெறுகின்றன. தேர்வுக் கலைத்திட்டத்தைப் பின்பற்றி தேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்படும் இவை ஒவ்வொரு மாதமும் இதழில் இடம்பெறுகின்றன.

இதற்காகவே, நாடு முழுவதும் உள்ள உணர்வுள்ளம் கொண்ட நல்லாசிரியர்கள் இந்த இதழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி கற்கச் செய்கின்றனர். அவ்வாசிரியர்களும் அவர்களிடம் பயிலும் மாணவர்களுமே இவ்விதழுக்கு முதுகெலும்பாக இருக்கின்றனர்.

தவிர, மரபுக் கவிதை இதுதான் என்று காட்டுவதற்கும்; மரபுக் கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்று எளிமையாகக் கற்பிப்பதற்கும்; மரபுக் கவிதையின் மாண்பைக் காக்கவும்; மரபுக் கவிதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கவும் இந்த நாட்டில் பெரும் பாடாற்றும் ஒரே இதழ் இந்த உங்கள் குரல்தான்.

தமிழ் இலக்கணம் தொடர்பாகத் தொல்காப்பியத்தின் அடிப்படையில் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் இதழாசிரியர் ‘தொல்காப்பிய மரபு’ என்னும் தொடர் கட்டுரைய எழுதி வருகின்றார்.

தமிழ் இலக்கணம் கடினம், கரடு முரடாக இருக்கிறது, பண்டித நடை புரியவில்லை, தமிழ் இலக்கணம் மிகவும் சிக்கலானது முதலான வறட்டு எண்ணங்களை அடித்து நொறுக்கி, இலக்கணத்தைகூட மிகச் சுவையாக, சுகமாக எடுத்துக்கூறுகிறது ‘தொல்காப்பியத் தேன்’ தொடர்.

‘திண்ணைப்பள்ளி’ என்ற பகுதியில் வாசகர்களின் ஐயங்களுக்கு இதழாசிரியர் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து வருகிறார். மொழியியல், இலக்கணம், இலக்கியம், யாப்பு தொடர்பான வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் ஒவ்வொன்றும் அரியவை மட்டுமல்ல; பாதுகாத்து வைத்துப் படிக்கத்தக்கவை எனலாம்.

‘யார்க்கும் எளிதாகும் வெண்பா’ எனும் பகுதி யாப்பிலக்கணம் பயின்றுகொள்வதற்கு அருமையான களம். இப்பகுதியைத் தொடர்ந்து படித்தும் உங்கள் குரலில் எழுதியும் மரபுக் கவிஞர்களாக ஆனவர்கள் நாட்டில் பலர்

இத்தனைக்கும் மேலாக, இதழாசிரியர் கவிஞர் ஐயா எழுதும் முகப்புக் கவிதைக்காகவே ஒவ்வொரு மாதமும் இவ்விதழை வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இனிய நடையில், எளிய சொற்களால் கட்டப்படும் அவருடைய பாட்டுகள் ஒவ்வொன்றும் அள்ளிப்பருக வேண்டிய அமுதச்சுவை.

மேலும், இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெறும் அடிக்குறிப்புகள் மிகவும் சிறப்பானவை. இந்த அடிக்குறிப்பை மட்டுமே படித்தாலும் ஒவ்வொரு மாதமும் ஒரு இலக்கண விதியை தெள்ளத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

இவை போக, பயனான கட்டுரைகள், செய்திகள், சிறுகதை என பல சுவையான அங்கங்களும் இடம்பெறுகின்றன.

மொத்தத்தில், உங்கள் குரல் இதழ் தமிழைத் தமிழாகப் படிக்கவும் எழுதவும் வழிகாட்டுகிறது. தமிழின் மீது உயர்ந்த மதிப்பையும் நம்பிக்கையையும் எற்படுத்துகிறது; தமிழ் இலக்கண இலக்கிய ஆளுமையை வலுப்படுத்துகிறது; மொழி அறிவையும் உனர்வையும் வளர்த்தெடுக்கிறது.

ஆகவே, தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ்ப்பணிக்கு அமர்த்தப்பெற்றுள்ள அதிகாரிகள், உயர்க்கல்விக் கழகங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் நல்லதமிழ் அறிய விழையும் அனைவரும் படிக்க வேண்டிய இதழ் ‘உங்கள் குரல்’.

இந்த இதழ் எங்கு கிடைக்கும் என்று தேடிக்கொண்டிராமல், உடனடியாக ஆண்டுக் கட்டணம் செலுத்திவிட்டால் போதும். இதழ் உங்கள் இல்லம் தேடி அஞ்சலில் வந்துவிடும்.

ஆண்டுக் கட்டணம்: RM36.00 [Ungalkural Enterprise எனும் பெயரில் காசோலை (Cheque) அல்லது பணவிடை(Money Order) அனுப்பலாம்.]

உங்கள் குரல் முகவரி: Ungalkural Enterprise, Room 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang.

தொ.பேசி / தொ.படி: 04-2615290