;

பாடல்கள்

Thursday, October 15, 2009

தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு.

தீபா”வலி”யும் தமிழரும்!

* இவ் விடயம் 14. 10. 2009, (வியாழன்), தமிழீழ நேரம் 20:10க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள்,
உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

கு.கண்ணன்
பெரியார் திராவிடர்கழகம்
“தமிழ்க் குடில்”
6/28, புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர் நகர்
சென்னை – 6000 017

Sunday, October 11, 2009

திருவைத் திருடிய திருடர்கள்


திருவைத் திருடிய திருடர்கள்

இரா.திருமாவளவன்

திரு எனும் அருந்தமிழ்ச் சொல் தமிழில் உயர்ந்த பொருளை உணர்த்தும் உயர்தனிச் சொல்லாகும். எல்லாச் சிறப்பும் திரண்டது எனும் பொருளில் இச்சொல் உருவாகியிருக்கிறது.

திரு - திரள் - திரட்சி என்பதே இதன் பொருள் விரி.

உயர்நிலை தகுதியுடைய ஆட்கள் , இடங்கள் , நூல்கள், கருத்துகள் முதலானவற்றுக்குத் திரு சேர்த்து எழுதுவதும் , சொல்வதும் தமிழர் பண்பு ; மாண்பு.

இவ்வடிப்படையில் தான் திருக்குறள், திருமுருகாற்றுப்படை , திருப்புகழ், திருவாசகம், திருவாய்மொழி, திருமந்திரம் , திருமுறை என நூல்கள் குறிப்பிடப்பட்டன. திருவள்ளுவர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தனர், திருமூலர் எனச் சான்றோர்கள் அழைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம், திருமலை, திருவாரூர் , திருச்செந்தூர், திருவேங்கடம் என ஊர்கள் அழைக்கப்பட்டன. திருமகள், திருமாரியம்மன், திருமுருகன், திருமால் எனத் தெய்வப் பெயர்கள் அமைந்தன. சிவனிய அன்பர்கள் தாங்கள் இடும் நெற்றிக் குறியைத் திருநீறு என்றும் மாலியர்கள் திருமண் என்றும் அழைத்தனர்.

செல்வம், சிறப்பு, கலை, பண்பு, மாண்பு, அறிவு, திறன், ஒழுக்கம், உயர்வு, புகழ், கல்வி என பல்வேறு உயர்வு கருத்துகளை இச்சொல் வழங்குவதை மறுப்பார் மறைப்பார் உண்டா?

தமக்குள்ளாகப் பேராற்றல் கொண்ட ஒருவரை , இவர் கருவிலே திருவுடையார் எனத் தமிழுலகம் சிறப்புறுத்துவதை நாம் அறிவோம்.

இத்தகு திருவைத் திருடி வாயில் மென்று குதப்பி வெளியிலே ஸ்ரீ எனக் கக்கினர் வடநாட்டார். தமிழரைத் த்ரமிளர் என்றும், பவளத்தை பிரவாளம் என்றும் மதங்கத்தை ம்ருதங்கம் என்றும் மெதுவை மிருது என்றும் படியை பிரதி என்றும் சமற்கிருதத்தில் திரித்தது போல் திருவை ஸ்ரீ எனச் சிதைத்தனர். இச்சிதைவை மீண்டும் தமிழில் புகுத்தி திருவிருந்த இடத்தில் எல்லாம் ஸ்ரீ எனும் கழிவினைச் சேர்த்தனர். ஸ்ரீ யைச் சேர்த்தால் தெய்வ அருள் கூடும் என்று புளுகிப் புனைந்துரையிட்டு தமிழரை மயக்கி மடையராக்கினர். மூடத்தமிழர் பலர் திருமுருகனை ஸ்ரீமுருகன் என்றும் திருமாரியம்மனை ஸ்ரீமாரியம்மன் என்றும் திருமகளை ஸ்ரீமகள் என்றும் மாற்றி அழைக்கலாயினர்; எழுதலாயினர். திருவாளர் ஸ்ரீமான் ஆகினார். திருவாட்டி ஸ்ரீமதி ஆகினார். ஆங்கிலச சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் கலந்து நடுசெண்டர் என்று சொன்னது போல் திருமுருகன் ஸ்ரீமுருகன் ஆனான். திரு மெய்யப்பன் என்று அழைக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீ மெய்யப்பன் என்று அழைக்கலாயினர்.

அண்மையில் கோலாலம்பூரில் ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தகைமிகு ஐ. தி. சம்பந்தன் அவர்கள் எழுதிய கருப்பு யூலை 83 எனும் நூல் அன்று வெளியீடு கண்டது. 1983 ஆம் ஆண்டு சிங்கள இன வெறியர்கள் தமிழர் மீது நிகழ்த்திய இனப்படுகொலையைச் சான்று பட விளக்கும் அரிய நூல்தான் அது. அந்நிகழ்வுக்கு யாழ்ப்பாணத் தமிழர்களே பெரும்பாலார் வந்திருந்தனர். அவர்களில் பலர் கறுப்புத் துறைமார்களாக இருக்கின்றமையால் நிகழ்ச்சியை ஆங்கிலத்திலும் வழிநடத்தினர். நிகழ்ச்சியை வழிநடத்திய அம்மையார் நாட்டின் தலைச் சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கின்ற மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியை , திலகவதி அம்மையாராவார். அது பற்றி நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் நிகழ்ச்சியை வழி நடத்திய பேராசிரியை மூச்சுக்கு மூச்சு ஒவ்வொரு பெருமகரின் பெயரினை விளிக்கின்ற போதும் ஸ்ரீ அப்புத்துரை என்றும் ஸ்ரீ ப.கு. சண்முகம் என்றும் ஸ்ரீ பாலகோபால நம்பியார் என்றும் திருவை அகற்றி திரிந்த சிதைந்த ஸ்ரீ யைச் சேர்த்து விளித்து தம் ஆழ்ந்த வடமொழிப் பற்றை வெளிப்படுத்திக் கொண்டார். திலகவதி அம்மையார் வாழ்வதும் வாழ்ந்ததும் தமிழால். அவர் உண்டது தமிழ்ச் சோறு. இப்படித்தான் சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு தம் சொந்த தாய்மொழிக்கே உலை வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுள் திலகவதியாரும் ஒருவரோ என நாம் எண்ண வேண்டியுள்ளது.

இந்தியாவில் இயங்கும் ஆர். எஸ்.எஸ். எனும் மதவெறி அமைப்பின் கிளையாக மலேசியாவில் இயங்கும் இந்து சேவை சங்கம் எனும் அமைப்பினரும் தங்களின் உயிர்க் கொள்கையாக இத்தகு தமிழ் அழிப்பு பணியினைத் திட்டமிட்டு நாடெங்கிலும் நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்குச் சமற்கிருதந்தான் மூல மொழி தெய்வ மொழி என எல்லாம். ஆனால் அந்தத் தேவ பாடையில் ஒரு போதும் இவர்களால் பேச முடியாது. தேவ பாடையின் பெருமையினைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நீச மொழியான தமிழ்தான் தேவைப் படுகின்றது. என்ன வெட்கக் கேடு!

இனி உண்மைத் தமிழ் உணர்வாளர்களே ! நாம் செய்ய வேண்டியது என்ன அன்பு கூர்ந்து சிந்தியுங்கள். செத்த மொழிக்காக வாழும் தமிழை அழிக்கத் துடிக்கும் கேடர்களிடமிருந்து நம் அன்னைத் தமிழைக் காக்க இளையத் தலைமுறையினரிடம் தமிழுணர்வையும் பற்றையும் நெஞ்சில் ஆழமாகப் பதியும் படி பரப்புங்கள். திருவைத் திருடிய திருடர்களையும் மீண்டும் நம்மிடமே கக்கும் பித்தர்களையும் அடையாளம் காட்டுங்கள். என்றுமுள தென்றமிழ் முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் என்றென்றும் நிலைபெறட்டும். வெல்க தமிழியம்.

திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?


திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?

இரா.திருமாவளவன்

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பயிலப் பட்டுள்ள பகவன் எனும் சொல்லை பலரும் பல காலும் பல வகையிலும் ஆய்வு செய்து கருத்து கூறியுள்ளனர்.
அது தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறு கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது.

பகு எனும் அடிச்சொல்லின் அடிப்படையில் பகவன் எனும் சொல் பிறந்துள்ளது. பகு - பக- பகவு ----- பகவு + அன் = பகவன்
பகு எனின் விலக்கு என்று பொருளாகும். பிரித்தல் நீக்கல் விலக்கல் என்று மேலும் இதன் பொருளை விரிவாக்கலாம்.
இருளை விலக்கி ஒளி ஏற்படுவதால் அககாலம் பகு -- பகல் எனப் பட்டது. அப்பகலைத் தரும் கதிரவன் பகலவன் என்றும் பகல் செய் செல்வன் என்றும் அழைக்கப் பட்டது.

பகலும் பகலவனும் எப்படி உருவாகினவோ அப்படியே பவகவனும் உருவாகியது. ஒளியைத் தந்து இருளை விலக்கியதால் கதிரவன் பகலவன் எனப் பட்டது போல , அறிவை நல்கி அறியாமை இருளை அகற்றும் அறிவுடைய பெருமக்கள் பகவன் எனப் பட்டனர். பகுத்து உணர்த்தும் சான்றோன் பகவன் எனப் பட்டான்.
இது ஏற்புடைய கருத்தாகும். தமிழரின் பகவன் எனும் அருந்தமிழ்ச் சொல்லே பின்னால் வடமொழியில் திரிபுற்று பகவான் ஆகியது. எனவே பகவன் பண்டைத் தமிழ் சொல்லே என்பதை நாம் அறிதல் வேண்டும். இது வட சொல் அன்று. இது பரம்பொருளைக் காட்டும் சொல்லும் அன்று. தமிழ் அறிவனை உணர்த்தும் தூய தமிழ் சொல்லாகும்.

Monday, October 05, 2009

மலேசிய தமிழ் நெறி கழகம் செமினி தொடர்பு குழு ஏற்பாட்டில் தமிழ் நெறி - திருக்குறள் வகுப்பு அறிமுக விழா


தமிழ்த்திரு / நிறைமலி ..........................
.......................................................
தமிழரின் தொன்மைகளை அறிந்து கொள்ளவும், இழந்ததை மீட்டெடுக்கவும், இவ்வறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் விழைகின்றோம்

நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.

திகதி : 09/10/2009
நேரம் : இரவு 7.00
இடம் : ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி மண்டபம்,செமினி,சிலாங்கூர்

சிறப்பு வருகை : தமிழ்த்திரு : இரா. திருமாவளனார் (தேசியத்தலைவர், மலேசிய தமிழ் நெறிக்கழகம்)

ஏற்பாடு : மலேசிய தமிழ் நெறிக்கழகம் செமினி தொடர்பு குழு

மேல் விளத்தம் பெற: நிலவன் (தலைவர், செமினி தொடர்பு குழு)
nilavan91@yahoo.com

Saturday, October 03, 2009

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 1

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே, உலகு.


பொழிப்புரை (Meaning) :
அகரம் முதலாகத் தொடர்ந்த எழுத்துக்களெல்லாம், மூலமுதல்வனின் முதற்கண் பொருட்டே, உலகில் உள்ளது.


விரிவுரை (Explanation) :

முதற் குறளாகிய இந்தக் குறள் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ் வள்ளுவர் எழுதியிருந்தும் அனைத்து உரையாசிரியர்களும், "கடவுளைப் போற்றவே எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பதை ஏனோ, எழுத்துகளெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனும் விளக்கத்தையே தருகின்றனர். பெரும்பாலும் அனைவரும் பரிமேலழகர் உரையினை அடியொற்றியதாகவே கருதுகின்றேன். [1]

ஆனால் வள்ளுவரின் இக்குறளில் அவ்வகையானத் தொடர்பற்ற தன்மையில் இருவரிகளும் இருப்பதையோ அல்லது இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதையோ என்னால் பார்க்க இயலவில்லை.

இருப்பினும் தெய்வம் உலகத்திற்கு முதற்றேபோலும் அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம் தலை என்றும் கொள்வதிலும் தவறும் இல்லை தான். ஆயின் கடவுள் வாழ்த்து என்றுச் சொல்லிய பிறகு, தெய்வத்தைத் தொழாதே எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையைச் சொல்லவேண்டிய அவசியம் யாது?

எனவே அகர முதல உள்ள எழுத்துக்கள் எல்லாம், ஆதி பகவன் எனும்படியான மூல முதல்வனாகிய கடவுளை முதன்மைப் படுத்தி அவரை அறியும் அல்லது வணங்கும் அல்லது வாழ்த்தும் பொருட்டே உலகில் உள்ளன அல்லது உலகில் உண்டாக்கப்பட்டன எனப் பொருள் கொள்ளலாம்.

அகர முதலிய எழுத்துக்கள் அனைத்தும் இறைவன் பால் படைக்கப்பட்டன என்பதே சரியான பொருள்.

மேலும் இது அகரத்தைத் துவங்கும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதும் உட்பொருள்.

சைவ நெறியே முதல் நெறியாக இருத்தலின் அக்கருத்துக்களை திருக்குறளில் ஒப்பீடு செய்து காட்ட முயற்சித்துள்ளேன். எனவே அவ்விதம் நோக்குங்கால்,

அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவனாகிய அரனை முதற்கண் கொண்டே உலகாயத்தம் ஆகியது என்று உறுதியுடன் சொல்லலாம்.

உலக மொழிகள் அனைத்தும் பெரும்பாலும் அகரத்திலேயே துவங்குகின்றன. அவை மனிதனின் முதல் ஒலியாகவும், அன்னையைக் குறிப்பதாகவும் கொள்கிறார்கள். தமிழில் அது அன்னையையும், அப்பனையும், அரனையும், அம்மையையும், ஓம் காரத்தின் (அஉம் ) முதல் ஒலியாகவும் முதல் எழுத்தாகவும் விளங்குகின்றது. மொழிகளின் முதல் எழுத்து அகரமாயினும், ஒவ்வொரு மொழியின் இறுதி எழுத்தும் வேறுபடுகின்றன. எனவேதான் வள்ளுவர் அகரம் முதல் தொடங்கி னகரவரையிலுமான எழுத்துக்கள் அனைத்தையும் என்று சொல்லாது அகரமுதல எழுத்தெல்லாம் என்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்படி முதல் குறளை அமைத்துள்ளார். வள்ளுவரின் இத்தகைய நுட்பம் மிகவும் போற்றுதற்குரியது. மேலும் வள்ளுவர் முதல் குறளை தமது தாய்மொழியின் முதல் எழுத்தான அகரத்தில் துவங்கி, கடைசிக் குறளின் கடைசி எழுத்தைத் தமிழின் கடைசி எழுத்தான 'ன்' னில் முடியுமாறு அமைத்துள்ளமையால் இத்தகையவாறு மொழி எண் கணிதத்தை இலக்கியத்தில் அமைத்த வகையிலும் முன்னோடியாக விளங்குகின்றார்.

மனிதன் இயற்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தே எதையெல்லாம் வெல்ல இயாலாததோ, விளங்காததோ அவற்றை எல்லாம் இறை என்று கொண்டான். அவ்வாறே அத்தகைய இறையை அறிதலே மனிதனின் முதல் அறிவுத் தேடலாகவும் இருந்தது. எனவே மொழியின் கண்டுபிடிப்பும், கல்வியின் நோக்கமும், அறிவின் தேடலும் அனைத்தும் இறைவனை நோக்கியே இருந்தன. தனது கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்து பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்லவே எழுத்துக்கள் தோன்றின. எனவே அத்தகைய தனது கண்டுபிடிப்புக்களையும், மூலப்பொருளாகிய இறைவனுக்கே அர்ப்பணித்துத் தங்கள் பணியைத் தொடருதல் முறைதானே.


குறிப்புரை (Message) :
அகரம் முதல் தொடங்கும் எழுத்துக்கள் எல்லாம் மூல முதல்வோனாகிய இறைவனை முன்னிறுத்தியே உலகில் உள்ளன.


அருஞ்சொற் பொருள் விளக்கம் (Synonyms) :

ஆதி:மூலம், முதல், தொடக்கம், அடிப்படை, மூத்த
பகவன்: பகுத்தவன், படைத்தவன், இறைவன், கடவுள், முதல்வன், தலைவன்
ஆதி பகவன்

மூல-முதல்வன் என்றால் வேறு கிளை முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று கொள்ளுதல் தவறு. அதாவது இறைவனை அனைத்திற்கும் மூத்தவராக, முதல்வராகச் சிறப்புச் செய்கிறார் என்று கொள்க.


அவையடக்கம் (Note) :

இவ்விதமாக இந்த முதல் குறளிற்கான கருத்தை நான் மட்டுமே முன்வைப்பதாக நினைக்கிறேன். இது எனக்கு முன்னோடிகளைத் தவறென்று சொல்லி எனது மேதமையைக் காட்ட நிச்ச்யம் பதிக்க வில்லை. என் கருத்திலும் தவறில்லை என்று எண்ணுவதாலும் இதுவே பொருத்தமானதாக இருக்கக் கூடுமோ என்று எண்ணுவதாலுமே பதிக்கின்றேன் என்பதைத் தன்னடக்கத்துடனும் அவையடக்கத்துடனும் தெரிவிக்கின்றேன்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 15
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

[1] நான் தற்சமயம் பரிமேலழகர், மணக்குடவர், மு. வரதராசனார், தேவனேயப் பாவாணர், G.U. போப், சித்தானந்த பாரதி, மு. கருணாநிதி, தமிழண்ணல், பி.எஸ். சுந்தரம் போன்றவர்களின் விளக்கங்களை ஒப்பீடு வழிகாட்டிகளாகக் கொண்டு விளக்க முயலுகின்றேன்.