;

பாடல்கள்

Thursday, July 16, 2009

கடவுள் நிலையில் மாந்தரின் அறிவும் அறியாமையும்



தமிழ் நெறி ஞாயிறு அமரர் பாவலர் திருமாலனார்



மதக் கொள்கையினர் : கடவுள் உண்டு என்று உணர்தற்கியலாமல் வெறும் நம்பிக்கையைக் கொண்டு அத்தன்மைக்கு உருவம், குணம் , செயல் என்பதாகக் கற்பித்துக் கொண்டு மாந்த வாழ்வே இறைமையின் இயங்கு - இயக்க நிலையாக உள்ளதைத தங்கள் அறியாமையால் தமது இயக்க உணர்வையே உணர முடியாத நிலையில் எண்ணற்ற இன மொழி நாடு கலைப் பண்பாடு போன்ற வேற்றுமைகளைக் கொண்டு அதனை உணரத தக்க நிலையினின்று முற்றாக முரணிய கருத்துகளால் அவர்கள் செய்கின்ற இறைவழிப்பாட்டால் கடவுள் என்பதை உண்மையிலேயே உணராதக் கரணியத்தால் இறை இல்லை என்றாக்குவதே மதக் கொள்கையினரின் செயலாக உள்ளது. அதற்கு அவர்கள் கூறும் உண்டு என்னும் நம்பிக்கையே ஆத்திகம் என்று நம்பி இறைமையை இல்லாமல் ஆக்குகின்றனர். அதாவது இவர்களின் கடவுள் நம்பிக்கையில் அறிவு சான்ற மெய்யுணர்விற்குச சற்றும் இடமின்மையால் இல்லை என்று கூறுவோர்க்கு அடிப்படை ஆக்கம் தருகின்றவர்களாக மத நம்பிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். உண்மையில் அகத்திலும் புறத்திலும் இவர்களே நாத்திகர்களாக இருக்கின்றனர்.


அறிவியலாளர்கள் : மேற்கண்ட மதக் கொள்கையினர்தம் அறியாமைத் தன்மையைத தங்களின் அறிவால் மட்டும் ஆய்ந்து பார்த்து அவை பொய்யானவை என்று தெளிந்து மெய்யுணர்வுப் பெறாதக் கரணியத்தால் மதக் கொள்கையினரால் கற்பனையாகக் கொள்ளப் பெற்ற கடவுள்களை இல்லை என்று சொல்வதையும் அதனால் இவர்கள் மதக் கொள்கையினருக்கு எதிர்புறமாக நிறுத்தப் பெற்று மதக் கொள்கையினரால் நாத்திகர்கள் அதாவது அவர்கள் கூறும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஆதலால் அவ்வாறு அழைக்கப் பெறுகின்றனர்.
இவ்வறிவியல் கொள்கையாளர்கள் எதிலுமே முற்றாக நிலைத்து நிற்கும் நம்பிக்கையற்றக் கரணியத்தால் அதாவது உண்மை எது எப்படி என்ன என்பதைக் காண வேண்டும் என்ற அறிவின் இடையறா உந்துதலால் முயன்றும் அதற்கு முடிவு காண முடியாமற் போகும் போது கடவுள் இல்லை என்று கூறுவதையும் (அதாவது மதக் கொள்கையினர் கூறும் கடவுளை )அதனால் இவர்கள் மதக் கொள்கையினர்க்கு எதிர்ப்புறமாக நிற்பதையும் அம்மதக் கொள்கையினரால் நாத்திகர்கள் அதாவது கடவுள் என்பதாக அவர்கள் கூறும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர்.
இவர்கள் எதிலுமே முற்றாக தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாதக் கரணியத்தால் மாந்த வாழ்வின் கட்டுப்பாட்டையும் மீறிய இன, மொழி , கலை, பண்பாடு போன்ற மாந்த நிலைகளில் நம்பிக்கையற்று ஆனாலும் உண்மையான நெறி வழிகளில் தங்களை மனத்தை அடக்கி உலகியல் நிலைக்கே பொதுமையானக் கருத்துகளைத் தருகின்றவர்களாக இவர்கள் தங்களுக்குள் இயங்கும் இறைமை அல்லது கடவுள் உண்டு என்பதற்குச் சான்றாக விளங்குகின்றனர். இவர்களை நாத்திகர்கள் என்று கூறுபவர் கடவுள் நிலையை உணர்ந்ததாகப் பொய்யாகக் கருதிக் கொண்டிருக்கும் மதக் கொள்கையினர் ஆவர். உண்மையில் உலகியல் வாழ்வு நிலையைப் பொதுமையானதாக்கும் இவர்களே உண்மையான ஆத்திகர்கள்.
சமயம் (அல்லது) மெய்யுணர்வாளர்கள் : மேற்கண்ட இரு கூறுபாடுகளையும் தமக்குள் தாமே உய்த்துணர்ந்து புறப்பாடும் அகப்பாடும் தாமாகவே இருப்பதைக் கண்டுணர்ந்து அதுவே கடவுள் நிலை அதாவது தாமே அனைத்துமாக இருப்பதைக் கண்டுணரும் மீமிசை நிலைக்குக் கடத்துகின்ற இயக்கமே கடவுள் நிலை என்பதை அறிவும் உணர்வும் அளவோடு கலந்து தாமே உலகும் மற்றவையும் என்றும் உலகும் பிறவும் தாமே என்பதாகவும் உணரப் பெற்று வாழ்வியல் நிலை கடந்து தாமே வாழ்வாக இருப்பதை உணர்ந்து பக்குவமடைதலால் சமயம் என்பதாக உணர்ந்தவர்கள் ; இவர்கள்தாம் மெய்யுணர்வாளர்கள். இம் மெய்யுணர்வால் மேற்கண்ட இரு திறத்தினரையும் விட்டு விலகி நிற்கும் விளக்கமாக விளங்குபவர்கள். இறைமை என்பது என்றோ அன்றே இவர்களும்.
காலம், இடம் சூழ்வினைகளைக் கடந்து நிற்பவர் இவர்களாதலால் இவர்களைத்தான் அதாவது இவர்களின் இயக்க நிலைகளே கடவுள் என்பதாக உணரப் பெறும். இம் மெய்மம் தமிழர்தம் பெற்றியர் சமயத்தில் இறைமை , உயிர், தளை, என்பதாக உணரப் பெறுகின்றது. இதில் தளை என்பது மதக் கொள்கையினரின் அடிப்படையாக உள்ள உலகியல் நிலை. உயிர் என்பது உலகியல் நிலைக்கு அடிப்படையாகி விளங்கும் பரத்துவ நிலை. இறைமை என்பது உலகியல் நிலையையும் அதற்கு அடிப்படையாக விளங்கும் பரத்துவமும் கலந்து அதனையும் கடந்து தாமாக விளங்கும் விளக்கப் பொருளாகி நிற்கும் மெய்யுணர்வு மெய்மம் எனப்பெறும் உண்மை நிலையாகும்.
இவ்வுண்மையானது பரத்துவ நிலையில் அகப் பொருளாகத் தோன்றியும் உலகியல் நிலையில் (தளை) அகத்தே தோன்றாமையுமாகி இயங்கும் தன்மையே இறைநிலையாகும். இவ்விறைமை நிலையே தோன்றா நிலையில் ஆற்றலாக உள்ள இயக்க ஊற்றாகும்.
இந்நிலைகளை புலன் கடந்த மெய்யறிவுத் தன்மையால் பக்குவம் பெற்ற பெற்றியர்கள் அல்லது மெய்யுணர்வாளர்கள் உணர்வதன்றி மதம் - அறிவு அதாவது உணர்வு அறிவு இவ்விரு கூறுகளின் தனித் தனி முறைகளால் உணர முயல்பவர்களால் உணர வியலாது. அறிவும் உணர்வும் தகு நிலையோடு கலந்தியங்கும் மெய்யுணர்வே கடவுள் நிலையாகும்.
இது ஒன்றே மாந்த வாழ்வின் அடிப்படை நெறியாகும். அனைத்திலும் இது உணரப் பெறும் போது வாழ்வு எனப் படும் உலகியல் தன்மை மாந்த நிலையில் இல்லாமல் போகும். இதுவே முதிர் நிலை என்பதாகக் கூறுவதே உணர்த்துவதே பெற்றியர் சமய மெய்மமாகும். இதுவே வாழ்வு எனும் முதிர் நிலையாகும்.
ஆகவே உண்டு என்று கூறுவோர் உள்ளத்தால் இல்லை என்றாக்குவதும் இல்லை எனக் கூறுவோர் தங்களை அறியாமலேயே உள்ளத்தால் உண்டு என்று ஆக்குவதும் வெளிப்படையாகிறது. உண்மையான மெய்யுணர்வாளர்களே உண்டு இல்லை எனும் தன்மையை உணர்த்துவதுடன் உண்டு இல்லை என்னும் உலகியல் நிலையில் கலந்து நிற்கும் மெய்யுணர்வே கடவுள் நிலை என்பது இதனாற் பெறப்படும் மெய்மமகும்.
முற்றும்

No comments: