;

பாடல்கள்

Wednesday, August 26, 2009

பறிபோவது இந்திய ஆய்வியல் துறையா? நமது இனத்தின் மானமா?



மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!

அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.

இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

மலேசியத் தமிழருக்கும் தமிழுக்கும் உரிமையாக இருக்கின்ற இந்திய ஆய்வியல் துறைக்கு வாழ்வா? சாவா? என்கிற விளிம்பில் நின்றுகொண்டு, அதன் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறது இந்தப் பதிவு! இன்றைய இளையோருக்கு நேற்றை நிகழ்வுகளைத் தூசுதட்டித் தருகிறது இந்த இடுகை! தொடந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனியாக ஒரு துறை செயல்படுவது என்பது பெரிய போராட்டத்தின் வழியாகக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சுவடுகள் மறைந்துபோனதால் தானோ என்னவோ, இன்றையத் தமிழர்களிடம் மொழிமானமும் இனமானமும் மழுங்கிப்போய்விட்டது போலும்!

சிங்கப்பூரில் செயல்பட்ட ஏழாம் கிங் எட்வர்டு (King Edward VII-1905) மருத்துவக் கல்லூரியும் இராபில்சு கல்லூரியும் (Raffles College-1929) இணைத்து, அத்தோபர் மாதம் 8ஆம் நாள் 1949ஆம் ஆண்டில் சிங்கையில் உருவாக்கப்பட்டதுதான் மலாயாப் பல்கலைக்கழகம்.

அதில், தமிழ்த்துறையை ஏற்படுத்துவதற்கு அன்றைய மலாயா, சிங்கைத் தமிழர்கள் எழுச்சியுடன் போராடினர். இந்தப் போராட்டத்தை அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி (கோ.சா) அவர்களின் ‘தமிழ் முரசு நாளேடு’ முன்னெடுத்து நடத்தியது. அதற்காக அன்றையத் தமிழர்கள் பெரும் அளவில் ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொடுத்தனர்.

இதன் விளைவாக, 1956ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை நிறுவப்பட்டது. பின்னர், 1959இல் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு இடம் மாறி வந்தது.

தொடக்கத்தில், தமிழ்த் துறை நிறுவப்பட்டபோது அதற்கு தகவுரைகள் (ஆலோசனை) வழங்க, இந்தியாவிலிருந்து நீலகண்ட சாத்திரியார் (Neelakanda Shasthri) மலாயா வந்தார். தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் பயிற்றுமொழியாக ‘சமற்கிருதத்தை’ (Sanskrit) வைக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரைக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. பெரும்பான்மைத் தமிழர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. மீண்டும் ‘தமிழ் முரசு’ நாளிகையின் வழியாக அமரர் கோ.சாரங்கபாணி களமிறங்கினார். அதோடு, காராக்கு(Karak) அகில மலாயாத் தமிழர் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் கல்வி அமைச்சுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனுவைக் கையளித்தன.
  • தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் வாயிலாக அரசாங்கத்தால் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; பயிற்றுமொழியாகத் ‘தமிழ்’ அரியணையில் அமர்த்தப்பட்டது.


இந்த மகிழ்ச்சியான செய்தியைப் “பல்கலைக்கழகத்தில் தமிழுக்கே முதன்மை” என்று சிங்கை தமிழ் முரசு முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்தச் செய்தியால் ஒட்டுமொத்தத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இதோடு போராட்டம் ஓய்ந்ததா என்றால், இல்லை! தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதே தமிழ் முரசு மூலம் அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிதிக்கு ஒவ்வொரு தமிழரும் ஆளுக்கு ஒரு வெள்ளி தரவேண்டும் என வலியுறுத்தினார்.

அமரர் கோ.சா.வின் வேண்டுகையை ஏற்று மொழி உணர்வும் இன உணர்ச்சியும் கொண்ட மலாயாத் தமிழர்கள், நாடு முழுவதும் நிதியைத் திரட்டிக் கொடுத்தனர். இந்த முயச்சிக்கு ஆதரவாக அகில மலாயா தமிழர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கங்கள், தமிழாசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கினர். இப்படியாகத் திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் வெற்றியோடு உருவாக்கப்பட்டது.
*(இன்றும்கூட நம் நாட்டில் இயங்கும் மிகப்பெரிய நூலகம் என்ற சிறப்பைப் பெற்றது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகம்தான்.)

இத்தனைக்கும் இடையில், தமிழ்த்துறையில் படிப்பதற்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியும் நடந்தது. அன்று நாடுதழுவிய நிலையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாக்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த்துறையில் மாணவர்கள் குறையும் போதெல்லாம் தமிழர் சார்ந்த இயக்கங்களின் அன்றையத் தலைவர்கள் ‘பல்கலைக்கழத்தில் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்’ என்று ஊர்கள்தோறும், தோட்டங்கள் தோறும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தினர்.

அன்று தொடங்கி இன்று வரையில் மலாயாப் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்து தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரிகளாக உருவாகி இருக்கின்றனர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் வரையில் தமிழிலேயே படிப்பதற்கான சூழல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று உருவாகி இருக்கிறது. மேலும், மொழியியல் புலம் என்ற மற்றொரு துறையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு, பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்திருப்பதுதான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை. காலந்தோறும் அதற்கு நெருக்கடிகள் ஏற்பட்டு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையும் உணர்வும்தாம் அரணாக இருந்து அத்துறையை மீட்டுத் தந்திருக்கிறது; உயிரோடும் உயிர்ப்போடும் காத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

அரைநூற்றாண்டுக் கால வரலாற்றைப் பெற்றிருக்கும் நமது இந்திய ஆய்வியல் துறை, இன்று பல நெருக்கடிகளுக்கு இடையில் தவித்துக் கொண்டிருக்கிறது! சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறது! இந்திய ஆய்வியல் துறை பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!

அதனைக் காக்கவும் காப்பாற்றவும் திறனற்றவர்களா நாம்?
அதனைக் காக்கவும் காப்பாற்றவும் வழியற்றவர்களா நாம்?
அதனைக் காக்காவிட்டால் வரலாற்றுப் பழி ஆகாதா? பிழை ஆகாதா?
அதனைக் காப்பாற்றாவிட்டால் அடுத்தத் தலைமுறை நம்மைக் கேள்வி கேட்காதா? நமது முகத்தில் காறி உமிழாதா?

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. இந்திய ஆய்வியல் துறை.. மிகக் குறைந்த ஆயுளோடு.. வரலாற்றுத் தடத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே.. நமது கண்முன்னாலேயே..

காணாமல் போகலாமா?

அப்படியே போனால்..!

பறிபோகப் போவது இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல!

ஒட்டுமொத்த மலேசியத் தமிழரின் மானமும்தான்!!

செய்தி:திருத்தமிழ்

1 comment:

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழின் இந்தச் செய்தியைப் பரவச் செய்தமைக்கு நன்றி.