;

பாடல்கள்

Sunday, October 11, 2009

திருவைத் திருடிய திருடர்கள்


திருவைத் திருடிய திருடர்கள்

இரா.திருமாவளவன்

திரு எனும் அருந்தமிழ்ச் சொல் தமிழில் உயர்ந்த பொருளை உணர்த்தும் உயர்தனிச் சொல்லாகும். எல்லாச் சிறப்பும் திரண்டது எனும் பொருளில் இச்சொல் உருவாகியிருக்கிறது.

திரு - திரள் - திரட்சி என்பதே இதன் பொருள் விரி.

உயர்நிலை தகுதியுடைய ஆட்கள் , இடங்கள் , நூல்கள், கருத்துகள் முதலானவற்றுக்குத் திரு சேர்த்து எழுதுவதும் , சொல்வதும் தமிழர் பண்பு ; மாண்பு.

இவ்வடிப்படையில் தான் திருக்குறள், திருமுருகாற்றுப்படை , திருப்புகழ், திருவாசகம், திருவாய்மொழி, திருமந்திரம் , திருமுறை என நூல்கள் குறிப்பிடப்பட்டன. திருவள்ளுவர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தனர், திருமூலர் எனச் சான்றோர்கள் அழைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம், திருமலை, திருவாரூர் , திருச்செந்தூர், திருவேங்கடம் என ஊர்கள் அழைக்கப்பட்டன. திருமகள், திருமாரியம்மன், திருமுருகன், திருமால் எனத் தெய்வப் பெயர்கள் அமைந்தன. சிவனிய அன்பர்கள் தாங்கள் இடும் நெற்றிக் குறியைத் திருநீறு என்றும் மாலியர்கள் திருமண் என்றும் அழைத்தனர்.

செல்வம், சிறப்பு, கலை, பண்பு, மாண்பு, அறிவு, திறன், ஒழுக்கம், உயர்வு, புகழ், கல்வி என பல்வேறு உயர்வு கருத்துகளை இச்சொல் வழங்குவதை மறுப்பார் மறைப்பார் உண்டா?

தமக்குள்ளாகப் பேராற்றல் கொண்ட ஒருவரை , இவர் கருவிலே திருவுடையார் எனத் தமிழுலகம் சிறப்புறுத்துவதை நாம் அறிவோம்.

இத்தகு திருவைத் திருடி வாயில் மென்று குதப்பி வெளியிலே ஸ்ரீ எனக் கக்கினர் வடநாட்டார். தமிழரைத் த்ரமிளர் என்றும், பவளத்தை பிரவாளம் என்றும் மதங்கத்தை ம்ருதங்கம் என்றும் மெதுவை மிருது என்றும் படியை பிரதி என்றும் சமற்கிருதத்தில் திரித்தது போல் திருவை ஸ்ரீ எனச் சிதைத்தனர். இச்சிதைவை மீண்டும் தமிழில் புகுத்தி திருவிருந்த இடத்தில் எல்லாம் ஸ்ரீ எனும் கழிவினைச் சேர்த்தனர். ஸ்ரீ யைச் சேர்த்தால் தெய்வ அருள் கூடும் என்று புளுகிப் புனைந்துரையிட்டு தமிழரை மயக்கி மடையராக்கினர். மூடத்தமிழர் பலர் திருமுருகனை ஸ்ரீமுருகன் என்றும் திருமாரியம்மனை ஸ்ரீமாரியம்மன் என்றும் திருமகளை ஸ்ரீமகள் என்றும் மாற்றி அழைக்கலாயினர்; எழுதலாயினர். திருவாளர் ஸ்ரீமான் ஆகினார். திருவாட்டி ஸ்ரீமதி ஆகினார். ஆங்கிலச சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் கலந்து நடுசெண்டர் என்று சொன்னது போல் திருமுருகன் ஸ்ரீமுருகன் ஆனான். திரு மெய்யப்பன் என்று அழைக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீ மெய்யப்பன் என்று அழைக்கலாயினர்.

அண்மையில் கோலாலம்பூரில் ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தகைமிகு ஐ. தி. சம்பந்தன் அவர்கள் எழுதிய கருப்பு யூலை 83 எனும் நூல் அன்று வெளியீடு கண்டது. 1983 ஆம் ஆண்டு சிங்கள இன வெறியர்கள் தமிழர் மீது நிகழ்த்திய இனப்படுகொலையைச் சான்று பட விளக்கும் அரிய நூல்தான் அது. அந்நிகழ்வுக்கு யாழ்ப்பாணத் தமிழர்களே பெரும்பாலார் வந்திருந்தனர். அவர்களில் பலர் கறுப்புத் துறைமார்களாக இருக்கின்றமையால் நிகழ்ச்சியை ஆங்கிலத்திலும் வழிநடத்தினர். நிகழ்ச்சியை வழிநடத்திய அம்மையார் நாட்டின் தலைச் சிறந்த பல்கலைக்கழகமாக இருக்கின்ற மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியை , திலகவதி அம்மையாராவார். அது பற்றி நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் நிகழ்ச்சியை வழி நடத்திய பேராசிரியை மூச்சுக்கு மூச்சு ஒவ்வொரு பெருமகரின் பெயரினை விளிக்கின்ற போதும் ஸ்ரீ அப்புத்துரை என்றும் ஸ்ரீ ப.கு. சண்முகம் என்றும் ஸ்ரீ பாலகோபால நம்பியார் என்றும் திருவை அகற்றி திரிந்த சிதைந்த ஸ்ரீ யைச் சேர்த்து விளித்து தம் ஆழ்ந்த வடமொழிப் பற்றை வெளிப்படுத்திக் கொண்டார். திலகவதி அம்மையார் வாழ்வதும் வாழ்ந்ததும் தமிழால். அவர் உண்டது தமிழ்ச் சோறு. இப்படித்தான் சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு தம் சொந்த தாய்மொழிக்கே உலை வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுள் திலகவதியாரும் ஒருவரோ என நாம் எண்ண வேண்டியுள்ளது.

இந்தியாவில் இயங்கும் ஆர். எஸ்.எஸ். எனும் மதவெறி அமைப்பின் கிளையாக மலேசியாவில் இயங்கும் இந்து சேவை சங்கம் எனும் அமைப்பினரும் தங்களின் உயிர்க் கொள்கையாக இத்தகு தமிழ் அழிப்பு பணியினைத் திட்டமிட்டு நாடெங்கிலும் நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்குச் சமற்கிருதந்தான் மூல மொழி தெய்வ மொழி என எல்லாம். ஆனால் அந்தத் தேவ பாடையில் ஒரு போதும் இவர்களால் பேச முடியாது. தேவ பாடையின் பெருமையினைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நீச மொழியான தமிழ்தான் தேவைப் படுகின்றது. என்ன வெட்கக் கேடு!

இனி உண்மைத் தமிழ் உணர்வாளர்களே ! நாம் செய்ய வேண்டியது என்ன அன்பு கூர்ந்து சிந்தியுங்கள். செத்த மொழிக்காக வாழும் தமிழை அழிக்கத் துடிக்கும் கேடர்களிடமிருந்து நம் அன்னைத் தமிழைக் காக்க இளையத் தலைமுறையினரிடம் தமிழுணர்வையும் பற்றையும் நெஞ்சில் ஆழமாகப் பதியும் படி பரப்புங்கள். திருவைத் திருடிய திருடர்களையும் மீண்டும் நம்மிடமே கக்கும் பித்தர்களையும் அடையாளம் காட்டுங்கள். என்றுமுள தென்றமிழ் முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் என்றென்றும் நிலைபெறட்டும். வெல்க தமிழியம்.

No comments: