;

பாடல்கள்

Saturday, September 26, 2009

இனியத் தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்




‘உயதம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா? 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.

நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.

அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.

முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.

ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.

‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.


தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.

‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.

பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.

இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.


தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.

‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526

‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655

1 comment:

சுப.நற்குணன்,மலேசியா. said...

முதல் சொல் 'உயதம்' என தவறாக உள்ளது. 'உதயம்' என திருத்திக்கொள்க.

மறுபதிவிட்டு செய்தியைப் பரவச் செய்தமைக்கு மிக்க நன்றி இளவலே.